www.asiriyar.net

Monday 30 October 2017

வினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்

அரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வுஅறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு, இன்னும் வினாவங்கி வெளியிடாததால், அவர்கள், தேர்வுக்கு தயாராவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நடத்தும் நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற, தமிழக பள்ளிக்கல்வித் துறையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், பிளஸ் ௧க்கு, பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பும், முக்கியமானது. முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 1க்கு, மாவட்ட அளவில் தேர்வு எழுதிய மாணவர்கள், இந்த ஆண்டு முதல், பொதுத்தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.மேலும், 10ம் வகுப்பில் பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள், இடைவெளி இன்றி அடுத்த ஆண்டிலும், பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பிளஸ் 1 பொதுத்தேர்வு முதல் முறையாக அறிமுகம் ஆவதால், மாணவர்களுக்கு வழிகாட்ட வினா வங்கி வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அறிவிப்பு வெளியாகி, ஆறு மாதங்களை தாண்டியும், இன்னும் வினா வங்கி வெளியிடவில்லை; அரையாண்டு தேர்வும் நெருங்கி விட்டது. அதனால், மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்துவது தாமதமாகிறது. சரியான வழிகாட்டல் இன்றி, பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியுமா என, மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை, வினா வங்கியை விரைந்து வெளியிட வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்..

No comments:

Post a Comment