போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் தமிழக அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் போராட்டம் நடத்தும் இவர்கள் எதிர்காலத்தில் ஏதாவது நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நேற்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார். ஆசிரியர் சங்கங்கள்தான் போராட்டத்தை தூண்டுகின்றன. எனவே ஆசிரியர் சங்கங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார்.
இந்த போராட்டத்தால் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதிருக்கும். மேலும் தவறு செய்த ஆசிரியர்கள் மீது ஆசிரியர் சங்கத்தினர் எப்போதாவது நடவடிக்கை எடுத்தது உண்டா?
அது போல் நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு ஆசிரியர்கள் கூட சங்கத்தில் இருந்திருக்க மாட்டார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக உயர்நீதிமன்றம் 12 கேள்விகளை கேட்டிருந்தது. இந்த கேள்விகள் தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
அதில் போராட்ட நாட்கள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாளாக கருதப்படும். 6 ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. போராட்டம் தொடர்பாக 43,508 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓராண்டில் அரசு ஊழியர்களுக்கான சம்பளமாக ரூ.700 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டால் மாற்று ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment