ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் 9 நாள் நடத்திய காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக நேற்று வாபஸ் பெற்றனர்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 9வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இதனிடையே மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன், போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 4 சங்கங்களின் நிர்வாகிகள் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
இந்தநிலையில், நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் தாஸ், தமிழ்நாடு துவக்க பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் மோசஸ் ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், ‘‘கடைசியாக 2006ல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. 10 ஆண்டுக்கு மேலாகியும் புதிய ஊதிய உயர்வு அமலாகவில்லை. ஊதிய உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஒன்றரை லட்சம் பேரை திரட்டி சென்னையில் பேரணி நடத்தினோம்.
இதையடுத்து, முதல்வருடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தனர். இதன்படி செப். 6ல் ஈரோட்டில் முதல்வரை சந்தித்தோம். ஆனால், முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் எங்களை போராட்டத்தில் தள்ளியது.
நீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டுமென்பது எங்களின் நோக்கம் அல்ல. இதை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் எந்த அடிப்படையில் போராட்டத்தை தொடர்கிறீர்கள்.
மாணவனுக்கு இரண்டாம் தாயை போன்ற ஆசிரியர்கள் ஏன் அவர்களது கடமையை செய்யவில்லை. உங்களது போராட்டத்தை உடனடியாக திரும்ப பெறவேண்டும்’’ என்றனர். இதற்கு சங்க நிர்வாகிகள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.ஜி.பிரசாத், ‘7வது சம்பள கமிஷன் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’ என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அரசு ஊழியர்கள் சட்டரீதியாக பிரச்னையை அணுகலாம். தடை இருந்தும் எப்படி போராட்டத்தை தொடர்கிறீர்கள்? உள்ளேயே சமைத்தும் போராடுகிறீர்கள்.
அரசு அலுவலகங்களுக்குள் போராடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. தடை உத்தரவை மீறி நடக்கும் உங்கள் போராட்டம் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது. எந்தவித நிபந்தனையும் இன்றி போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்’’ என்றனர். நீதிபதிகள் எச்சரிக்கை:
இதற்கு மூத்த வக்கீல் என்.ஆர்.ஜி.பிரசாத், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களின் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்க வேண்டும். அதுவரை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’ என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், ‘‘உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்.
ஒரு மணி நேரத்திற்குள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டி வரும். உங்கள் பிரச்னைக்கு தலைமைச்செயலர் மூலம் தீர்வு காணலாம்’’ என்று கூறினார்கள். ‘எந்த உத்தரவாதமும் இல்லாமல் எப்படி போராட்டத்தை விலக்கி கொள்ள முடியும்’ என்று மூத்த வக்கீல் கேட்டார். அரசு தரப்பில், ‘தலைமை செயலாளரை சங்கத்தினர் தனியாக சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியக்குழு அமல்படுத்துவது குறித்த குழுவின் அறிக்கை பெற்று ஆய்வில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதற்கு மூத்த வக்கீல், ‘அரசு அதிகாரிகளுடன் பலமுறை பேசியும் பலனில்லை’ என்றார்.
போராட்டத்தை விலக்கினால் தீர்வு: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘போராட்டத்தை உடனடியாக விலக்கி கொண்டால் தலைமை செயலரை நீதிமன்றத்துக்கு வரவைத்து தீர்வு காணலாம்’ என்றனர். இதையடுத்து, தற்காலிகமாக போராட்டத்தை விலக்கி கொள்வதாக போராட்ட குழுவினர் சார்பில், நீதிபதிகளிடம் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:
அரசு ஊழியர்களின் போராட்டத்தால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால், மக்களுக்கான இடையூறு தொடர்கிறது. அரசு அலுவலகங்களை தனிநபர் சொத்து போல பாவித்துள்ளனர். போராட்டத்தை இரவிலும் தொடர்ந்துள்ளனர். அரசு அலுவலகங்கள் அவர்களது ஓய்வு அறை அல்ல. மக்கள் தங்களது பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர்.
21ம் தேதி ஆஜராக உத்தரவு: தற்போது தமிழகத்தில் கடும் வறட்சியான நிலை உள்ளது. இதனால், தங்களின் குறைகளுக்கு தீர்வு காண அரசு அலுவலகங்களுக்குள் மக்களால் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். எனவே, தமிழக தலைமை செயலாளர் செப். 21ல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்படுகிறது. அவர், அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு ஆஜராகி, அரசு ஊழியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பணிக்கு திரும்பினர்: இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
‘அரசு முடிவு காணவேண்டும்’
வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நீதிமன்றம் எங்களது பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறியுள்ளது. இதற்காக தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்று எங்களது காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி பணிக்கு திரும்புகிறோம். எங்களது பிரச்னைக்கு அரசு முடிவு காணவேண்டும். இல்லாவிட்டால், போராட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.
No comments:
Post a Comment