www.asiriyar.net

Thursday, 14 September 2017

மாவட்டம் தாண்டி தேர்வு மையம் : சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி

சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம், தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணிஇடங்களுக்கு, 1,325 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 23ம் தேதி, எழுத்துத் தேர்வை நடத்துகிறது. 

'ஹால் டிக்கெட்': இதில், தமிழக அரசு பள்ளிகளில், தற்காலிகமாக பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், கவின் கலை கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டம் முடித்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்வு எழுத, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, ஆன்லைனில் நேற்று முன்தினம், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது.

தாமதம் : 'ஹால் டிக்கெட்' பெற்ற தேர்வர்கள் பலர், அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு, வேறு வேறு மாவட்டங்களில், தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினருக்கு, சென்னை சைதாப்பேட்டையிலும்; ஈரோடுக்கு, கோவை; தர்மபுரிக்கு கிருஷ்ணகிரி; திண்டுக்கல் தேர்வர்களுக்கு மதுரை; கன்னியாகுமரி மாவட்டத்தினருக்கு, திருநெல்வேலி என, டி.ஆர்.பி., நிர்ணயித்துள்ளது. இதனால், தேர்வு எழுத உள்ளோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும், 22ம் தேதி வரை, பள்ளி பணியில் இருக்க வேண்டும் என, பகுதி நேர ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 23ம் தேதி தேர்வுக்கு வெகு தொலைவில் இருந்து, தேர்வு மையத்திற்கு வருவதில் தாமதம் ஏற்படும் என, அச்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: சிறப்பு ஆசிரியர் தேர்வுக்காக, ௨௩ம் தேதி நடக்கவிருந்த காலாண்டு தேர்வுகள், 22ம் தேதிக்கு மாற்றப்பட்டன. 
அதனால், அனைத்து பள்ளிகளும் காலியாக இருக்கும் நிலையில், அவரவர் மாவட்டங்களில் தேர்வு மையம் அமைத்தால் சிக்கல் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment