www.asiriyar.net

Friday 8 September 2017

ஐகோர்ட் தடையை மீறி தொடரும் அரசு ஊழியர்களின் போராட்டம்!!

கோர்ட் கிளை தடை விதித்துள்ள நிலையிலும், அரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் இன்றும்(செப்.,8) போராட்டம் நடத்தி வருகின்றனர்.


தடை:

பழைய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்தது. அதிகாரிகள், முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று போராட்டம் துவங்கியது. ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஐகோர்ட் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தொடர்ந்து அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இரண்டாவது நாளாக ஐகோர்ட் தடையை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்றும் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறியல்:திருப்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை ரயில் நிலையம் முன்பு சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை, நெல்லை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது.

மறுப்பு:இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகி அளித்தபேட்டியில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடக்கும் என்று தான் அறிவித்தோம். காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் என அறிவிக்கவில்லை. இதன் பின்னர் ஆலோசனை கூட்டம் நடக்கும் எனவும் கூறினோம். ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை(செப்.,9) சென்னையில் கூடுகிறது. இதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். எங்களது கோரிக்கையில் நியாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment