www.asiriyar.net

Friday 15 September 2017

பழைய ஓய்வூதியம் உள்பட கோரிக்கை நிறைவேறாத விரக்தியில் 3 ஆசிரியர்கள் பரிதாப பலி

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இரவு, பகலாக  நீடிக்கும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.  இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்று வந்த 3 பேர் நேற்று திடீரென இறந்தனர். 

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் தற்ேபாது 5 லட்சத்து 50 ஆயிரம் பேர்  பங்கேற்றுள்ளதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள் என்ற பேதம் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே சமைத்து, அங்ேகயே தூங்கி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். சில மாவட்டங்களில்  கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த  புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்த சேவியர் என்பவர்  இறந்தார். சென்னை எழிலகத்தில் நடந்த காத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட லட்சுமி என்ற அரசு ஊழியர் நேற்று இறந்தார்.  திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஆசிரியர் காளிமுத்து பல போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்காத விரக்தியில் மனமுடைந்து விஷம் குடித்து இறந்தார். 

மேலும் புதுக்கோட்டையில் போராட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணன் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 பேர் பலியான சம்பவம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதவிர, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 5 ஆயிரத்துக்கும் குறையாத ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கலைநிகழ்ச்சி நடத்தியும், ஒப்பாரி வைத்தும், ஆடல் பாடல்களில் ஈடுபட்டும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

சில இடங்களில் சாமியானா பந்தல், மைக் செட் கட்டக்கூடாது, சமையல் செய்யக் கூடாது என்று கட்டுப்பாடுகளை போலீசார்  விதித்ததால் மைக் செட் இல்லாமல், சாமியானா பந்தல் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் விடிய விடிய நடந்த போராட்டம் நேற்று காலையில் மீண்டும் களைகட்டத் தொடங்கியது. நேற்றும் அதே இடத்தில் சமைத்து காலை உணவு வழங்கப்பட்டது. மதியமும் உணவு சமைத்து வழங்கினர்.  

நேற்று  காலை எழிலக வளாகத்தில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். அங்கு மைக் செட் அமைக்க கூடாது என்று தடை செய்தனர்.  போராட்டத்தில்  இறந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

தலைமை செயலக ஊழியர்கள் இன்று முதல்  போராட்டம்

கடந்த 4 நாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று தலைமை செயலக ஊழியர்களின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், இன்று முதல் தலைமை செயலகத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. எனவே, இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் தலைமை செயலகம் வருவார்கள். ஆனால், பணி ஏதும் செய்யாமல் தலைமை செயலகத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில் சுமார் 4500 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இது தமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment