www.asiriyar.net

Wednesday, 23 August 2017

Flash News : NEET தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.

நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலில் நீட் தேர்வில் ஒசூரைச் சேர்ந்த CBSE பாடத்திட்டத்தில் பயின்ற சந்தோஷ் என்ற மாணவன் 656 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளனர். கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா இரண்டாவது இடத்தையும்,   திருச்சியை சேர்ந்த  சையத் அபி்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தரவரிசைப்பட்டியலில் முதல் 20 இடம் பிடித்தவர்களில் 5 பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என தெரிகிறது. 13 பேர் CBSE பாடத்திட்டத்திலும், 2 பேர் ISCE பாடத்திட்டத்திலும் படித்தவர்கள். கலந்தாய்வு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலிங்க குறித்து மாணவர்களுக்கு தொலைபேசி மற்றும் SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் இணையத்தை தொடர்நது பார்த்து வருவதன் மூலமும் தகவல் தெரிந்து பின் கலந்தாய்விற்காக சென்னை புறப்பட்டு வரலாம் என்றார்.

தமிழகத்தில் நீண்ட குழப்பத்திற்கு பின்னர் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கையை நீட் தேர்வு அடிப்படையில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவ கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 4,567 இடங்கள் உள்ளன. அத்துடன் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பாமல் திருப்பி கொடுக்கப்பட்ட 57 இடங்கள் என மொத்தம் 4,624 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து இதற்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. நாளை மாற்று திறனாளிகளுக்கும், நாளை மறுநாள் முதல் பொதுகலந்தாய்வும் நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி செப்டம்பர் 4-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க முடியாமல் போனால் கூடுதல் அவகாசம் கோர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பல் மருத்துவத்திற்கு செப்டம்பர் 10-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

No comments:

Post a Comment