கடந்த 01.04.2003-க்குபிறகு பணியில் சேரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அரசுப் பணிக்கு உரிய சிறப்பம்சங்களான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, தொகுப்பு ஓய்வூதியம், மற்றும் பொது வருங்கால வைப்புநிதி சலுகைகள் நிறுத்தப்பட்டு, 14 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme - OPS) மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது பற்றி ஆய்வு செய்ய அரசு அமைத்த நிபுணர் குழுவின் (Expert committee) அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர், தமிழக அரசு ஊழியர்கள். ஏன் தெரியுமா?
தமிழக அரசுப் பணியில் சேரும் ஓர் ஊழியர் அதிகபட்சமாக 40 ஆண்டுகளும், மத்திய அரசுப் பணியில் சேரும் ஓர் ஊழியர் 42 ஆண்டுகளும் பணியில் நீடிக்க முடியும். 30 ஆண்டுகளுக்குக் குறையாமல் அரசுப் பணியாற்றி ஓய்வுபெறும் ஊழியர் பெறக்கூடிய கடைசி மாத ஊதியமானது அவர் பணியில் சேர்ந்தபோது பெற்ற முதல் மாத ஊதியத்தைப்போல சுமார் நூறு மடங்காக இருக்கும். இந்த கணக்கின்படி, பழைய ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட அடுத்த வருடம், 01.01.2004 அன்று 8,000 - 275 - 13,500 என்ற ஊதிய ஏற்ற முறையில், ரூ.8,000-யைத் தொடக்க ஊதியமாகக் கொண்டு பணியைத் தொடங்கிய ஓர் அலுவலர், 33 ஆண்டுகள் பணியாற்றி 31.3.2036 அன்று ஓய்வு பெறும்போது ரூ.10,47,000-யை தனது கடைசி ஊதியமாக (Pay Last Drawn) பெறுவார்.
அதாவது, 6-வது ஊதியக் குழுவுக்கும், 7-வது ஊதியக் குழுவுக்கும், இடைப்பட்ட காலத்தில் வழங்கப்பட்டுள்ள 125% அகவிலைப்படி மற்றும் 7-வது ஊதியக் குழு, ஊதிய நிர்ணயம் செய்ய பரிந்துரைத்துள்ள அடிப்படைக் காரணி 2.57 ஆகிய இரண்டையும், அடுத்து வரப்போகும் இரண்டு ஊதியக் குழுக்களுக்கும் அதே அளவில் கணக்கிட்ட ஊதியம்தான் 31.3.2016 அன்று ரூ.10,47,000 பெறக்கூடும். அது மட்டுமல்ல, மேற்கண்ட அலுவலர், தனது 33 ஆண்டு காலப் பணியில் நான்கு பதவி உயர்வுகள் பெற முடியும். ஆனால், பதவி உயர்வை கணக்கில் கொள்ளாமல் வெறும் தேர்வு நிலை, சிறப்பு நிலைகளை மட்டுமே கணக்கிட்டு பெற்ற ஊதியம்தான் ரூ.10,47,000.
பழைய ஓய்வூதியத் திட்டம் இப்போதும் தொடர்ந்திருக்குமானால், இவரது இந்தக் கடைசி ஊதியத்துக்கு கீழ்க்கண்ட ஓய்வூதியம் பலன்கள் கிடைக்கக்கூடும்.
மாத ஓய்வூதியம் ரூ.5,23,500 + படிகள்
குடும்ப ஓய்வூதியம் ரூ.3,14,000 + படிகள்
பணிக்கொடை ரூ.1,72,75,500
ஓய்வூதிய தொகுப்புத் தொகை ரூ.1,75,28,874
விடுப்பு ஊதியம் ரூ.1,15,17,000 + படிகள்
இத்துடன் இவரது பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) கணக்கில், ரூ.3,00,00,000 அளவுக்கு இறுதி இருப்பு இருக்கக்கூடும். தவிர, பணிக்கொடை, ஓய்வூதியத் தொகுப்பு மற்றும் விடுப்பு ஊதியத்தைக் கூட்டினால் கிடைக்கும் ரூ.7,63,21,374-யை முதலீடாகவும் ரூ.5,23,500 மாத ஓய்வூதியத்தை செலவுக்கும் வைத்துக் கொண்டு பணிபுரிந்த காலத்துக்கு சமமான காலம், நிதித்தடை குறுக்கிடாத நிம்மதியான ஓய்வுகால வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும்.
மேற்கண்ட ரூ.7,63,21,374-யைக் குறைந்தபட்சம் 8% வட்டி தரும் வகையில் முதலீடு செய்தால், அதன் மூலம் மாத வருமானமாக ரூ.5,08,800 கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
இத்தனை எதிர்பார்ப்புக்கு மாறாக, பழைய ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால், அவருக்குக் கிடைக்கக்கூடியது விடுப்பு ஊதியம் ரூ.1,15,17,000- மும், பங்களிப்பு ஓய்வூதிய முதிர்வு தொகையான ரூ.4,01,45,934 ம் மட்டுமே. இவை இரண்டின் கூட்டுத் தொகை ரூ.5,16,62,934. இந்தத் தொகைக்கு அதே 8% முதலீட்டில் கிடைக்கக்கூடிய மாத வருமானம் ரூ.3,44,420 மட்டுமே.
ஆக, பழைய ஓய்வூதியத்திட்டத்தின் மாதாந்திர வரவு 5,23,500+5,08,809=10,32,309 இத்துடன் கையிருப்பு முதலீடு ரூ.7,63,21,374.
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படியான மாத வரவு ரூ.3,44,420 கையிருப்பு முதலீடு ரூ.5,13,62,934
இவை இரண்டுக்குமிடையே உள்ள வித்தியாசம் அதிகமாக இருப்பதால்தான் ஓ.பி.எஸ். என ஏழாவது ஊதியக்குழு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தை பலத்த எதிர்பார்ப்புடன் பெறக் காத்திருக்கின்றனர் தமிழக அரசு ஊழியர்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் 01.01.2004 முதல் பழைய ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு, என்.பி.எஸ் (N.P.S) என்னும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்ததால், அவர்களும் ஏழாவது ஊதியக்குழு முன்பு தமது முறையீடுகளை சமர்ப்பித்தனர். அவற்றுள் முக்கியமானவை:
புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்ததால், ஒன்றாக இருந்த ஊழியர்கள், இரண்டு பிரிவாக ஆகிவிட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் வரும் பணப் பலன், வருங்கால சந்தை மதிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையுமா என்ற நிச்சயமற்ற தன்மை. இதுவே, ஓய்வூதியம் என்றால் அவ்வப்போது உயர்த்தப்பட வாய்ப்பு உண்டு.
பணியில் சேரும் தொடக்க நிலை ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால் குடும்பத்துக்கு ஏற்படும் பாதுகாப்பின்மை.
பொது வருங்கால வைப்பு நிதி சலுகையும் நிறுத்தப்பட்டுவிட்டதால், அவசரத் தேவைகளுக்கு வெளியாரிடம் கடன் பெற வேண்டிய கட்டாயம்.
பங்களிப்பு ஓய்வூதிய தொகை, வட்டி விகிதம் முதலானவை காரணமாக சிறிது வேறுபடலாம். தற்போதைய கணக்கீடு 8%.
இவை போன்ற கோரிக்கைகளை உள்வாங்கிக் கொண்ட ஊதியக்குழு, தேவையான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளது. தமிழக அரசு, இதைவிட ஒருபடி முன்னே சென்று, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலாக்கம் பெறுவதை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கையை கூடுதல் அமலாக்கம் பெறுவதை ஆய்வு செய்ய வல்லுநர் குழுவை அமைத்திருக்கிறது. குழுவின் அறிக்கையை கூடுதல் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் தமிழக அரசு ஊழியர்கள், தளரா நம்பிக்கையுடன்!
பழைய ஓய்வூதியத்திட்டம் அமலாக்கப்பட்டால் பங்களிப்பு ஓய்வூதிய தொகை என்னவாகும்?
ஊழியர்கள் செலுத்திய சந்தா மற்றும் அதற்கான வட்டியும் பொது வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்படும். அரசின் பங்களிப்பு தொகையும் அதற்கான வட்டியும் அரசுக் கணக்கில் சேர்க்கப்படும். 01.07.1960 வரை அமுலில் இருந்த தமிழ்நாடு பங்களிப்பு சேமநிதி ஓய்வூதிய காப்பீட்டு விதி 1950-ஐ ரத்து செய்து விட்டு, தமிழக அரசு ஊழியர் அனைவருக்கும் 01.07.1960 முதல் பொது வருங்கால வைப்பு நிதியைக் கொண்டு வந்தபோது மேற்கண்ட நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது.
- பி. மொய்தீன் ஷேக் தாவூத், அரசு முன்னாள் ஊழியர்
No comments:
Post a Comment