தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக திருச்சியை சேர்ந்த தங்ககாளை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் பூந்தோட்டங்கள் அமைத்து பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் பள்ளிக்கு விடுமுறை ஆகும். ஆனால் ஆசிரியர் தங்ககாளை விடுமுறை நாளான நேற்று பள்ளிக்கு வந்து தோட்ட பராமரிப்பு மற்றும் பள்ளியை சுற்றி உள்ள பகுதியில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் நேற்று மாலை தனது ஊரான திருச்சிக்கு செல்ல காவல்காரன்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் குடி போதையில் வந்து ஆசிரியரிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். இதில் தலையில் காயம் அடைந்த தங்ககாளை மயக்கம் அடைந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் ஆசிரியரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தை அறிந்த காவல்காரன்பட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் காவல்காரன்பட்டி அரசு பள்ளி அருகே ஒன்று திரண்டனர். அப்போது பள்ளி விடுமுறை நாளிலும் பள்ளிக்கு ஆசிரியர் வந்து தோட்ட பராமரிப்பு மற்றும் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டவரை தாக்கிய மர்ம நபர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய கோரியும் காவல்காரன்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளி முன்பு தோகைமலை- திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் விமல்ராஜ், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜ்மோகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தோகைமலை- திருச்சி சாலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
No comments:
Post a Comment