www.asiriyar.net

Thursday, 24 August 2017

பணியிடமாற்றம் செய்வதாக மிரட்டியதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலைக்கு முயற்சி

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நடுப்பட்டறை அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிபவர் கனிமொழி. இவர் கடந்த சில வாரங்களாக மருத்துவ விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. 

கடந்த 17ம் தேதி நடுப்பட்டறை அரசு தொடக்கப் பள்ளிக்கு ஆலங்காயம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மாதம்மாள் ஆகியோர் ஆய்வுக்கு சென்றனர். அப்போது, பள்ளியில் ஆசிரியை பாத்திமா மட்டுமே இருந்துள்ளார். பின்னர், மருத்துவ விடுப்பில் உள்ள தலைமையாசிரியை கனிமொழி, வகுப்பு ஆசிரியை பாத்திமா ஆகியோரை ஆலங்காயம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு சித்ரா உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 18ம் தேதி மாலை 3 மணியளவில் தலைமை ஆசிரியை கனிமொழியும், ஆசிரியை பாத்திமாவும் அவரது அலுவலகத்துக்கு சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்திய உதவி தொடக்கக் கல்வி அலுவலர், கனிமொழியை கட்டாய விருப்ப ஓய்வுபெற்று செல்லுமாறும், ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, நெக்கனா மலையில் உள்ள அரசு தொடக்க பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்வதாகவும் எச்சரித்துள்ளார். இதனால் மனமுடைந்த தலைமை ஆசிரியை கனிமொழி, கடந்த சனிக்கிழமை மாலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை கணவர் ஜெயசீலன் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.  தகவலறிந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், ஆலங்காயம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சித்ராவிடம் விளக்கம் கேட்டு, ‘மெமோ’ வழங்கியுள்ளார்.  சித்ராவிடம் இன்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment