www.asiriyar.net

Monday 21 August 2017

அரசு ஊழியர்கள் நாளை 'ஸ்டிரைக்' : அரசு அலுவலகம், பள்ளிகள் முடங்கும் அபாயம்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடு கின்றனர்.
அதனால், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ'வும், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ'வும் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பாக, போராட்டத்தில் குதித்துள்ளன.நாளை, மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பளத்தை உயர்த்துதல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளுக்காக, போராட்டம் நடக்கிறது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், 10 லட்சம் பேர் வரை, போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் வகுப்புகள் நடத்த முடியாமலும், அரசு அலுவலகங்களில், நிர்வாக பணிகளும் முடங்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், 'வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், ஒழுங்கு நடவடிக்கை பாயும். தற்காலிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்' என, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர், மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:
ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அஞ்ச மாட்டார்கள்.'எஸ்மா, டெஸ்மா' போன்ற சட்ட நடவடிக்கைகளையே, ஜாக்டோ - ஜியோ சங்கங்கள் எதிர் கொண்டு போராடின. மத்திய அரசின், 'மிசா' காலத்தையும், எதிர்கொண்டவர்கள் ஆசிரியர்கள்.எனவே, திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடக்கும். சங்க பிரதிநிதிகளை அழைத்து, அரசு பேச்சு நடத்தாவிட்டால், செப்., 7 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடத்துவோம், என்றார்.

No comments:

Post a Comment