பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் - அரசு எச்சரிக்கை
ஜாக்டோ-ஜியோ அறிவித்தபடி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது. 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
இதன் காரணமாக ஜாக்டோ-ஜியோ இணைந்து இன்று (22ம் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் அறிவித்தது. அதன்படி இன்று அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் தலைவருமான கணேசன், அதன் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று சென்னையில் அளித்த பேட்டி:
ஜாக்டோ-ஜியோ ஏற்கெனவே அறிவித்தபடியும், திட்டமிட்டபடியும் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடக்கும். கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் கேட்டு வரும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. 3 முக்கிய கோரிக்கைகளை தற்போது நிறைவேற்ற கேட்கிறோம். ஆனால், அரசு அது குறித்து ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே ஜாக்டோ-ஜியோ இணைந்து இன்று ஒட்டுமொத்தமாக 12 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இதில் 80 சங்கங்கள் இணைந்து போராடும். வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் இல்லை என்று அரசு தரப்பில் முதலில் கூறப்பட்டது. பின்னர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டுகிறார்கள். இதற்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. எனவே விரைவில் ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். இல்லை என்றால் திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 7ம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
65,000 வங்கி ஊழியர்கள் போராட்டம்
வங்கிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜி.எஸ்.டி என்ற முறையில் சேவை வரி வசூலிக்க கூடாது, பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 65 ஆயிரம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகே காலை 10 மணிக்கு வங்கி ஊழியர் சங்க ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment