www.asiriyar.net

Monday 2 July 2018

அரசு பள்ளி மாணவர்களுக்கு லண்டன் பேராசிரியர்கள் மூலம் இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு!



நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அதன் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கும் விழா நடந்தது.
திருச்செங்கோட்டில் நடந்த விழாவில் பாராட்டு சான்றுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு ரூ.27 ஆயிரத்து 205 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த மாதம் லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வருகிறார்கள். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 6 வாரம் தங்கியிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஆங்கிலத்தை கற்றுத்தர இருக்கிறார்கள்.
அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ 3 ஆயிரம் பள்ளிகளில் கொண்டுவர டெண்டர் விடப்பட்டுள்ளது.
9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறைக்கு 10 கணினி, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 20 கணினி என வழங்கி இணையதள பயிற்சி அளிக்கப்படும். ஒரு சிறந்த ஆசிரியர் 100 பள்ளிக்கு காணொலி காட்சி மூலமாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 15 இடங்களில் சி.ஏ. பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஆடிட்டர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். 20 ஆயிரம் மாணவர்கள் இதன்மூலம் தணிக்கை பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment