www.asiriyar.net

Tuesday 10 July 2018

எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னையில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சென்னை உயர் நீதிமன்றத்தில் சுபாஷ் சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பள்ளிகளில் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. உலக சுகாதார அமைப்பு உடற்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.தமிழகத்தில் 9,000 பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விதிமீறல். ஆனால், இதனைமாநில அரசும் , சிபிஎஸ்இ நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. எனவே, உடற்கல்வியை பயிற்றுவிப்பதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உரிய விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சிபிஎஸ்இ நிர்வாகத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உடற்கல்வி தொடர்புடைய வசதிகள் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைஒத்திவைத்தனர்.

1 comment: