வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற அரசுப் பெண் ஊழியருக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பெண் ஊழியர்களுக்கு 12 வாரமாக இருந்த பேறுகால விடுப்பை, கடந்த ஆண்டிலிருந்து 26 வாரமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையில் தனி உதவியாளராகப் பணியாற்றும் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் "பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் என்னால் கருவுற இயலாத நிலையில் இருக்கிறேன். இதன் காரணமாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவெடுத்தேன். அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி வாடகைத் தாய் 2 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள எனக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று விடுப்புக்காக விண்ணப்பித்தேன்.
ஆனால் மத்திய சிவில் சர்வீசஸ் விடுப்பு சட்டவிதிகளின்படி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு பேறுகால விடுப்பு கிடையாது என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, எனக்குப் பேறுகால விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என அந்தப் பெண் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்தபோது, உயர் நீதிமன்றங்களின் 3 தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
"பேறுகாலம் என்பது தாய்மை அடைவது. அந்தப் பெண் இயற்கைத் தாயா அல்லது வாடகைத் தாயா என்று வேறுபடுத்திப் பார்ப்பது சரியாக இருக்காது. மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு ’வாடகைத் தாயும், அவர் மூலம் குழந்தை பெறும் தாயும் குழந்தையுடன் சில காலம் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் நிலையில் இருப்பார்கள். எனவே இருவருக்குமே பேறுகால விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அந்தப் பெண்ணுக்குப் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
உலகளவில் கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது இந்தியாவில் அதிக நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. கனடாவில் 50 வாரங்களும், நார்வேயில் 44 வாரங்களும் பேறுகால விடுப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment