அடுத்த ஆண்டு, தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளில் அதிக
மாணவர்கள் சேரும் வகையில் அவற்றின் தரம் உயர்த்தப்படும் என்று சென்னையில் இன்று (பிப்ரவரி 8) தெரிவித்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அதன்பின், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
“பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதுவதற்காக, இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. மாணவர்கள் அதிக தூரம் பயணித்து தேர்வெழுதுவதைத் தவிர்ப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், எல்லா வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்படும். அப்போது, அரசுப்பள்ளிகளைத் தேடி மாணவர்கள் வரும் நிலைமை உண்டாகும். அடுத்த ஆண்டு தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேரும் வகையில் அவற்றின் தரம் உயர்த்தப்படும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடனே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், சில துறைகளை அரசு கொண்டுவரவுள்ளது” என்று கூறினார்.
மேலும், நாட்டிலேயே முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்தார் செங்கோட்டையன். ”விபத்தில் மாணவர் சிக்கி உயிரிழந்தால் 1 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தால் 50ஆயிரம் ரூபாயும், சிறு காயமடைந்தால் 25 ரூபாயும் வழங்கப்படும். 48 மணி நேரத்தில், உடனடியாக இந்த இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இது, இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை” என்று கூறினார்.
சமீபத்தில் சில பள்ளிகளில் நிகழ்ந்த ஆசிரியர் – மாணவர்கள் இடையேயான வன்முறை குறித்த கேள்விக்குப் பதிலளித்தார் செங்கோட்டையன். அப்போது, இதுபோன்ற குற்றச்சாட்டு இனிமேல் வராத வகையில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். “நீதிபோதனை வகுப்புகள், யோகா, விளையாட்டுப் பயிற்சிகளுக்கென நேரம் ஒதுக்கப்படும். மாணவர்களின் பிரச்சனைகள், மன அழுத்தத்தைப் போக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். ஆசிரியர் மாணவரையும் மாணவர் ஆசிரியரையும் நேசிக்க, இந்த அரசு கற்றுத்தரும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment