www.asiriyar.net

Saturday 10 February 2018

நாளை, 'குரூப் - 4' தேர்வு : 21 லட்சம் பேர் பங்கேற்பு

அரசு துறைகளில், வி.ஏ.ஓ., 494; இளநிலை உதவியாளர், 4,301; தட்டச்சர், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலி இடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப, 'குரூப் -- 4' போட்டி தேர்வு, நாளை மாநிலம் முழுவதும் நடக்கிறது.

இதற்காக, 6,962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 20 லட்சத்து, 69 ஆயிரத்து, 274 பேர் எழுதுகின்றனர். ஒரு லட்சத்து, 3,500 பேர், தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்; 1,165 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 170 மையங்களில், கேமரா பொருத்தப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக கண்காணிக்கப்படுகிறது. சென்னையில், ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து, 120 பேர், 508 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இந்தியாவில், எந்த ஒரு தேர்விலும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் நடக்கும் தேர்வில், முதன்முதலாக, 21 லட்சம் பேர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் - 4 தேர்வில் புதிய வசதி குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேர்வு முறையில் மேம்பாடாக, பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்ப பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகியவை, விடைத்தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதனால், தவறாக பதிவெண் குறிப்பிட்டால், மதிப்பெண் குறைக்கும் தண்டனை, ரத்து செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாளில், விடைகளை குறிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வில், பதில் அளிக்காமல் விடுபடும், வினாக்களின் கட்டங்களை கணக்கிட்டு எழுத, புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்வு மைய பகுதிகளுக்கு, காலை, 8:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை, கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க, போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment