www.asiriyar.net

Sunday 25 February 2018

உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: கல்விக்கடன் மறுத்த வங்கிக்கு ரூ.25ஆயிரம் அபராதம் - வழக்கு தொடுத்த மாணவியிடமே வழங்க உத்தரவு

பொறியியல் பட்டதாரி மாணவிக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அத்தொகையை சம்பந்தப்பட்ட மாணவியிடமே வழங்க உத்தரவிட் டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவி ஆர்.முத்தழகி. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 2011-ல் பொறியியல் படிப்புக்காக ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் கல்விக்கடன் கேட்டு போளூர் தாலுகா கேளூரில்உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் விண்ணப்பித்தேன். ஆனால், வங்கி நிர்வாகம் கடன் வழங்கவில்லை. எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மாணவியின் கோரிக்கையை பரிசீலித்துகல்விக்கடன் வழங்குமாறு வங்கி நிர்வாகத்துக்கு கடந்த 2012-ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து வங்கி மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஏழைகளுக்கு மறுப்பு

ஏழைகளுக்கு கல்விக்கடன் மறுக்கப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கும் ஓர் உதாரணம். கோடீஸ்வரர்களுக்கு எந்த நிபந்தனையும், உத்தரவாதமும் இல்லாமல் கோடிக்கணக்கில் வாரி வாரி கடன் கொடுக்கும் வங்கிகள், ஏழை மாணவ, மாணவிகள் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தால் அலைக்கழிக்கின்றன. வங்கிகள் பணம் படைத்தவர்களுக்கு ஒருமாதிரியான போக்கையும், நடுத்தர, ஏழை வர்க்கத்தினருக்கு வேறுமாதிரியான போக்கையும் கடைபிடிப்பது கண்டனத்துக்குரியது.

ரூ.48 ஆயிரம் கோடி

வழக்கு தொடர்ந்த மாணவி தனது படிப்பை முடிக்கும் வரையிலும் கல்விக்கடன் வழங்காமல் இழுத்தடித்த வங்கி, அந்த கோரிக்கையையே தற்போது செல்லாததாக்கி விட்டது. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ.48 ஆயிரம் கோடி வரை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை. ஆனால், கல்விக்கடன் திருப்பிச் செலுத்தப்படுவது இல்லை என எந்த புகாரும் வருவது இல்லை.உரிய நேரத்தில் கல்விக்கடன் மறுக்கப்படுவதால், நாட்டுக்கு மிகச்சிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் கிடைக்காமல் போய்விடுகின்றனர். அவர்களது சேவையும், திறமையும் நாட்டுக்கு கிடைக்காமல் போவது வேதனை அளிக்கிறது.

நீதிமன்றம் ஒரு கருவி

இந்த வழக்கில் மேல்முறை யீடு செய்வதற்கு வங்கி நிர்வாகம் செலவழித்த தொகையை கல்விக்கடனாக கொடுத்திருந்தால்கூட மனுதாரர் பலனடைந்து இருப்பார். வங்கி நிர்வாகத்துக்கு சமூக நலனில் கொஞ்சம்கூட அக்கறை இல்லை என்பதையே இது அப்பட்டமாக காட்டுகிறது.நீதிமன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கல்விக்கடன் மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை மனுதாரருக்கு வங்கி நிர்வாகம் 2 வாரத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட் டுள்ளனர்.

No comments:

Post a Comment