www.asiriyar.net

Tuesday 9 January 2018

EMIS - 'மக்கர்' ஆகும் இணையதளத்தால் பாதிப்பு : மவுசுடன் மல்லுக்கட்டும் ஆசிரியர்கள்

மாணவர்களின் விபரங்களை சேகரிக்கும், 'எமிஸ்' கல்வி மேலாண்மை இணையதளம் அடிக்கடி, 'மக்கர்' ஆவதால், கணினி மற்றும் மவுசுடன் ஆசிரியர்கள் மல்லுக்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், இரண்டு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், பல பள்ளிகளின் வருகை பதிவேடுகளில், மாணவர் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

அரசின் இலவச திட்டங்களை பெறவும், ஆசிரியர்களின் பணியிடங்கள் ரத்தாகாமல் தக்க வைக்கவும், பள்ளிகள் தரப்பில், குறைவான மாணவர் எண்ணிக்கையை கூட, அதிகரித்துகாட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, தினசரி பள்ளிக்கு வரும் சரியான மாணவர்களின் விபரங்களை திரட்ட, பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசு, உத்தரவிட்டுள்ளது.இதற்காக, 2011ல் கல்வி மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டு, 'எமிஸ்' என்ற இணையதளம் துவங்கப்பட்டது. இதில், மாணவர்களின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், ஆதார் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட தகவல்கள், ஆறு ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.ஆனால், இவை, பள்ளிக்கல்வித் துறையின், தகவல் தொகுப்பு இணையதளத்தில், ஒருங்கிணைக்கப்படவில்லை. அவ்வப்போது, மாணவர்களின் விபரங்கள் மாயமாகி வருகிறது.இந்நிலையில், எமிஸ் இணையதளத்தில் பதிவுகளை புதுப்பிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு முன், உத்தரவிடப்பட்டது.

பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, எமிஸ் இணையதள பதிவு பணியும் இணைத்துவழங்கப்பட்டது. ஆசிரியர்கள் வகுப்புகளை ரத்து செய்துவிட்டு, மாணவர் விபரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், எமிஸ் இணையதளம் தொடர்ந்து மக்கர் ஆவதால், 'ஆன்லைனில்' விபரங்களை பதிவு செய்ய முடியாமல், தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள், மணிக்கணக்கில், கணினி மற்றும்மவுசுடன் மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: எமிஸ் இணையதளத்தை பராமரிக்க, சரியான தொழில்நுட்பத்தை, பள்ளிக் கல்வித் துறை கையாள வேண்டும். இல்லையென்றால், ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும். இதே நிலை நீடித்தால், ஆசிரியர்களின் வகுப்பு நடத்தும் நேரம் மிகவும் குறைந்து, பள்ளிகளின் கற்பித்தல் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

  1. The 2018 Cadillac XT5 carries over with little change. That means you still get those sharp styling that clearly distinguishes it from its Japanese and German rivals – all at a relatively affordable starting price of $40,595.

    ReplyDelete