இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கும்படி, போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், இருசக்கர வாகன விபத்துகள் அதிகரிக்கின்றன. இதற்கு, சாலை விதிகளை அறியாமல், இரு சக்கர வாகனங்களை இயக்குவதே காரணம் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், 'இருசக்கர வாகனங்களை விற்போரும், அதற்கான ஓட்டுனர் உரிமம் வழங்குவோரும், விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்' என, போக்குவரத்து துறை கமிஷனர், தயானந்த் கட்டாரியா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, சாலை விதிகள் குறித்து தெரிவதில்லை. அதனால், நாளுக்கு நாள் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதை கட்டுப்படுத்துவதும், விபத்துக்கான காரணங்கள் குறித்து, வாகன ஓட்டிகளுக்கும், வாகன விற்பனையாளர்களுக்கும் புரிய வைப்பதும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இரு சக்கர வாகன விற்பனையாளர்களுக்கு, போக்கு வரத்து கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவு:வாகனத்தின் தன்மை, சாலை விதி, மீறுவோருக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து, குறும்படமாக வெளியிடும் வகையில், 'டிவி'யுடன் கூடிய, 'சாலை பாதுகாப்பு மையம்' என்ற அமைப்பை, விற்பனையகத்திலேயே, வரும், 10ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும்.
அம்மையத்தில், பயிற்சி பெற்ற பின், வாகன உரிமம் வழங்கலாம் என்ற, பரிந்துரைக் கடிதத்தை இணைத்து, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இம்மையத்தை, வரும், 15ம் தேதிக்குள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வர்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
No comments:
Post a Comment