www.asiriyar.net

Thursday 23 November 2017

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு,
பள்ளிநேரம் போக, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு வகுப்புகளின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சுண்டல், பிஸ்கட் போன்றவை வழங்கப்படுகின்றன. சில பள்ளிகளில் காலையில் சிற்றுண்டி, மாலையில் தேனீர் வழங்கப்படுகிறது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில், மாணவர்களே மாலை நேர சிற்றுண்டி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், கிராமங்களை உள்ளடக்கிய நகர பள்ளிகளில், மாலை நேர சிறப்பு வகுப்பு, இரவு, 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. அதே போல், அதிகாலையில், 6:00 மணிக்கு சிறப்பு வகுப்புகள் துவங்குகின்றன.இதனால், மாணவர்களின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படுகிறது. மாணவியர், அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்டு வருவதும், மாலை இருள் சூழ்ந்த பின், பள்ளியிலிருந்து பஸ்களில் வீட்டுக்கு வருவதும், பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளை காலையில் சூரிய உதயத்திற்கு பின்னரும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் முடித்துக் கொள்ள, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். சில மாவட்டங்களில் மட்டும் இந்த உத்தரவு உள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் இதை அமல்படுத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment