www.asiriyar.net

Wednesday 29 November 2017

மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? - ஆனந்த விகடன்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அங்கும், இங்குமாகப் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பள்ளி ஆசிரியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் இதுபோன்ற செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர்களிடம் பேசினோம்.



மனித உரிமை ஆர்வலரும், கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமான கல்யாணி "பள்ளி மாணவர் தற்கொலை, மாணவிகள் தற்கொலை எனத் தொடர்ந்து செய்தியாக வருவது பரிதாபமாக இருக்கிறது. ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வரச் சொன்னதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கேட்கிறபோது மாணவர்களின் மனவலிமை குறைந்து வருவதைத்தான் காட்டுகிறது. 

மாணவர்கள், படிப்பு... படிப்பு என்று மதிப்பெண்ணை மட்டுமே வாழ்க்கை என்று நோக்கி நகரும்போது மனவலிமையை இழக்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டாமல் மதிப்பெண் பெறுவதை மட்டுமே வாழ்க்கை என்று வழிகாட்டுகிறார்கள். இதனால் பள்ளிகளில் கல்விசாரா திறனை மேம்படுத்துவதற்கான (Extra Curricular activities) வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கான வாய்ப்புகள் இருந்திருந்தால் கல்வி ஆர்வம் குறைந்தாலும் இதர திறமைகளை வளர்ப்பதில் அதிகளவில் கவனம் செலுத்தி மாணவர்கள் முன்னேறுவார்கள், தற்கொலை போன்ற எண்ணங்கள் மனதில் வளர இடங்கொடுக்க மாட்டார்கள். 

பள்ளியில் ஓவிய ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருப்பதில்லை. கல்வி என்பதே ஆளுமையை வளர்க்க வேண்டும் என்பதே. ஒவ்வொரு மாணவர்களிடமும் தனி ஆளுமைத் திறன்கள் இருக்கின்றன. அதனை ஆசிரியர்கள் அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி மேம்படுத்திட வேண்டும். ஆனால், ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி என்பதை மட்டுமே வைத்துச் செயல்படச் சொல்வதால் இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. 

பல பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பைப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பதினொன்றாம் வகுப்பிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களை மதிப்பெண்ணை நோக்கித் தள்ளும்போது கல்வியில் ஈடுபாடு இல்லாமல் போகிறது. தனியார் பள்ளிகளில்தான் இவ்வளவு சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இவ்வளவு பேர் என விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். தற்போது அரசுப் பள்ளிகளிலும் இந்த விளம்பர யுக்தி பரவியிருக்கிறது. 

மாணவர்களிடம் மென்மையாக நடந்துகொள்ளவேண்டும். தவறு செய்தாலும் அனைவரின் முன்னிலையில் திட்டாமலும் அவமானப்படுத்தாமலும் தனியே அழைத்துப் பேசவேண்டும். மாணவர்களை ஊக்குவிக்கவேண்டும். வகுப்பறையில் எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் வந்தால் மாணவர்கள் பயப்படவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

பள்ளியிலும், வகுப்பிலும் கட்டுப்பாடு அதிகமாகும்போதே மாணவர்கள் திசை திரும்புகின்றனர். வகுப்பில் இயல்பாகவும், ஜாலியாகவும், மகிழ்ச்சியாகவும் பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதன்மூலம் தடம்மாறும் பிள்ளைகள் மனம்மாறி கற்றலில் கவனத்தை செலுத்த ஆரம்பிப்பார்கள். 

கல்வி வாழ்க்கையில் நல்ல தைரியம் மிக்கவர்களை உருவாக்க வேண்டுமே தவிர, மதிப்பெண் மதிப்பெண் எனத் தைரியமில்லாத பிள்ளைகளை உருவாக்கக் கூடாது. இப்போது அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியிருப்பதாலும் மாணவர்களின் கற்றல் திறனும், படைப்பாற்றல் திறனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனைப் பெற்றோர்கள் கருத்தில்கொண்டு பள்ளியில் சேர்க்க வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார் பேராசிரியர் கல்யாணி. 

தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பின் ஆலோசகரும், கல்வியாளருமான சுவாமிநாதன் "தற்போது எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பில் நுழைந்துவிட்டால் போதும். எளிதான தேர்வு முறையினால் பத்தாம் வகுப்பிலும் எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம். மாணவர்கள் பதினொன்றாம் வகுப்புக்கு வரும்போது மட்டுமே தடுமாற்றத்தை சந்திக்கிறார்கள். கல்விக்கும் இவர்களுக்கும் ஏதோ முரண்பாடு இருப்பதுபோல் உணர்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பில் சேரும்முன்பே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும். 

மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் குரூப்-1 மற்றும் குரூப்-2 எடுத்துத் தடுமாறும்போது தங்களது பிரிவை மாற்றிக்கொள்ளும்வசதியும் இல்லை. மேலும், பெற்றோர்கள் குரூப்-1 அல்லது குரூப்-2-வில்தான் தன்னுடைய பிள்ளை படிக்க வேண்டும் என்று நெருக்குதலைத் தருகிறார்கள். இதுவும் பிள்ளைகளுக்குக் கல்வியின் மீது கசப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளியில் அதிக தேர்ச்சி விகிதத்தைத் தரும்போது ஏன் அரசுப் பள்ளியில் தர முடிவதில்லை என்று கேட்டு, ஆசிரியர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் கூட்டவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுவதால் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர். 

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் செயல்பாடுகளிலும் வேறுபாடு இருப்பதை உணரலாம். பல தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளியில் இதுபோன்ற நடைமுறைகள் எதுவும் இல்லை.

அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகமும் செயல்படாமல் இருக்கின்றன. இனியாவது, இதனைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். கல்வி அதிகாரிகள் இதனைக் கண்காணிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் அடிக்கடி பள்ளிகளுக்கு  விசிட் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் நீண்ட காலமாக நன்னெறி வகுப்புகள், கை வேலைப்பாடு, ஓவியப்பயிற்சி, உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. இதற்கான ஆசிரியர்கள் இடங்கள் காலியிடங்களாகவே இருக்கின்றன. இதனையும் கவனத்தில்கொள்ள வேண்டும். உயர்கல்வி அதிகாரிகள் தலைமையாசிரியர்களை மட்டும் வைத்து மீட்டிங் நடத்துகிறார்கள். ஆனால், ஆசிரியர்களையும் அழைத்து கூட்டங்களை நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.

மாணவர்களின் நன்னடத்தை தவறுதலுக்கு என்னமாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்பதுகுறித்து வழிகாட்டுதல் நெறிமுறையை உருவாக்கிடவேண்டும். கல்வித்துறை ரிசல்ட்டை முதன்மை கொள்ளாமல் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தினால் இதுபோன்ற பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், உடை என நிறையவே செலவு செய்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாணவர்களுக்கும் பொறுப்பு உணர்வு அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர வேண்டும்" என்கிறார். 


நான்கு மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியரிடம் பேசியபோது "மேல்நிலை வகுப்பில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். வகுப்பில் அதிக மாணவர்கள் உள்ளதால் முழு கவனத்தையும் செலுத்த முடிவதில்லை. தற்போது மாணவர்களுக்கு பயந்துதான் வகுப்பு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் நிகழும் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையும் குற்றம்சாட்டுவது தவறானது" என்கிறார்.

பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க களமிறங்கி இருக்கும் தமிழகப் பள்ளி கல்வித்துறை மாணவர்களின் பிரச்னை குறித்தும் கவனம் செலுத்திட வேண்டும். 

நன்றி- ஆனந்த விகடன்

No comments:

Post a Comment