ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலை கிடைக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தின் போது திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும் கோரிக்கை மனுக் களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
இதில் கல்வி உதவித் தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400 மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்ற கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை டவுன் முத்து விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்த இன்பராஜ் என்பவர் ஏலச்சீட்டு நடத்தினார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர். இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.3½ கோடியுடன் இன்பராஜ் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதியில் இருந்து தலைமறைவாகி விட்டார்.
ஏலச்சீட்டில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர்கள். எனவே, ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவாக உள்ள இன்பராஜை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டுதர வேண்டும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென வேட்டவலம் சாலை ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் என்பவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட முன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கொளஞ்சியப்பனை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
கொள்ஞ்சியப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி வாசகங்கள் எழுதிய 2 அட்டைகளை முதுகிலும், மார்பிலும் கட்டி தொங்கவிட்டு இருந்தார்.
முன்னதாக அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனக்கு 50 வயது ஆகியும் அரசு பணி என்பது கனவாகவே போகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையால் பணி கிடைக்கவில்லை. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும். இனி நியமிக்கப்படும் மத்திய, மாநில அரசு பணியாளர்களை 15 ஆண்டுகளில் பணி ஓய்வு அளித்திட வேண்டும். இதனால் வறுமை ஒழிந்து பொருளாதார ஏற்றத்தாழ்வு நீங்கும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment