www.asiriyar.net

Thursday, 5 October 2017

FLASH NEWS : ஒரு வாரத்தில் 7வது ஊதியக் குழு பரிந்துரை - தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 முதல் 25% வரை சம்பளம் உயர்வு?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசும் 7வது ஊதியக்குழுவை அமுல்படுத்துவது குறித்து நிதித்துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு  அமைக்கப்பட்டது. ஆனால் சம்பள உயர்வுக்கான அறிக்கையை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தினர். 

மேலும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தினர். 

இதன் உச்சக்கட்டமாக கடந்த மாதம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றம் தலையிட்டு, தமிழக அரசின் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் கடந்த மாதம் 27ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அளித்தார். இந்த பரிந்துரையை அரசு பரிசீலித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு கூடுதலாக வழங்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறது.

இதுகுறித்து தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகப்பட்சமாக 20 முதல் 25 சதவீதம் வரை சம்பளத்தை உயர்த்தி வழங்க பரிசீலித்து வருகிறது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு வாரத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பார். மேலும், 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முன்தேதியிட்டு கூடுதல் சம்பளம் வழங்க வாய்ப்புள்ளது.

அதே நேரம், அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அப்படியே அமல்படுத்தினால் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, அதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்அடைய வழிவகை ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment