www.asiriyar.net

Monday, 30 October 2017

மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை

கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பச்சையப்பன் கல்லுாரி, மூன்றாம் ஆண்டுமாணவர், வாசுதேவன்; ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதாக, கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்டார்.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதி மன்றத்தில், வாசுதேவன் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். கல்லுாரி முதல்வர் ஆஜராகும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான, கல்லுாரி முதல்வர், ''கல்லுாரி விதிகளை மதிப்பதில்லை; வகுப்புகள் நடப்பதற்கு, இடையூறு செய்வார்; மற்ற மாணவர்களை, போராட்டங்களுக்கு துாண்டுவார்; எனக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த மாணவனை அனுமதித்தால், கல்லுாரியின் சூழ்நிலை கெட்டு விடும்,'' என்றார்.அதற்கு, நீதிபதிகிருபாகரன், ''மாணவர்கள் எல்லாம், உங்கள் பிள்ளைகள்; மனுதாரரை மன்னியுங்கள்; மன்னிப்பு கடிதம் கொடுக்கும்படி, மாணவனுக்கு உத்தரவிடுகிறேன்,'' என்றார். நீதிமன்றத்துக்கு வந்திருந்த மாணவருக்கும், நீதிபதி அறிவுரை கூறினார்.

''சில அமைப்புகளால், மாணவர்கள் நாசமாகின்றனர்; படிப்பதற்காக தான், கல்லுாரிக்கு மாணவர்கள் வர வேண்டும்; சில சமூக விரோதிகளால், மாணவர்கள் திசை திரும்புகின்றனர். அப்பாவி மாணவர்களை காப்பாற்ற, அந்த அமைப்புகள் முன்வராது,'' என, நீதிபதி தெரிவித்தார்.இதையடுத்து, வேறு கல்லுாரியில், மனுதாரரை சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, வரும், ௩௦ம் தேதிக்கு,தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment