*☀ கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா?☀*
*பகுதி - 11*
*புதிய தேசிய ஓய்வூதியத் திட்டம் முன்மொழியும் சூதாட்டத் (முதலீட்டுத்) திட்டங்கள்*
✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்.
அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில், இரண்டு அடுக்கு ஓய்வூதியங்களும், 3 நிதி மேலாளர்களால் தலா 6 பிரிவுகளில் 18 வகையான முதலீட்டுத் திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.
*☀அடுக்கு-1 (TYRE : I) :*
இது ஓய்வூதியக் கணக்குத் (PENSION ACCOUNT) திட்டமாகும். அரசு ஊழியர்கள் கட்டாயம் சேர்க்கப்படுவார்கள்.
இத்திட்டப்படி ஊதியத்தில் 10% (ஊதியம் + அகவிலைப்படி) தொகையினை ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். அதே அளவிற்குச் சமமான தொகையினை அரசும் வழங்கும். இத்தொகைக்கு அரசின் வரிச்சலுகை உண்டு.
*இக்கணக்கில் சேரும் தொகையினை ஓய்வு பெறும் நாள் வரை திரும்பப்பெற முடியாது.*
*☀அடுக்கு-2 (TYRE : II) :*
இது ஊழியரின் சுயவிருப்பத்தின் பேரில் செய்யப்படும் சேமிப்புக் கணக்குத் (SAVINGS ACCOUNT) திட்டமாகும்.
இத்திட்டத்திற்கு குறைந்தபட்சம் ஊதியத்தில் 2% முதல் உச்ச வரம்பின்றி எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
*ஆனால், இம்முதலீட்டிற்கு அரசின் பங்குத்தொகையும், வரிச்சலுகையும் கிடைக்காது.* இதில் சேரும் தொகையினை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
இருப்பினும் அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில், PFRDA இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
*01.05.2009 முதல் பங்குச்சந்தையினை அடிப்படையாகக் கொண்ட புதிய தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.*
*☀முதலீட்டுத் திட்டப் பிரிவுகள்:*
*PLAN E :*
அதிக ஆபத்திற்குட்பட்ட (HIGH RISK - HIGH RETURN) பங்குச் சந்தைப் பங்குகளில் Equity Market என்ற அடிப்படையில் முதலீடு செய்யப்படுவது
*PLAN C :*
தனியார் கார்பரேட் நிறுவனப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு (MEDIUM RISK - MEDIUM RETURN)
*PLAN G :*
அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடு (LOW RISK - LOW RETURN)
SBI, LIC & UTI ஆகிய மூன்று நிதி மேலாளர்களும் 2 பிரிவுகளில் தலா 6 முதலீட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளனர். அதன் இரண்டு பிரிவுகளின் விபரம் பின்வருமாறு:
*☀1. ACTIVE CHOICE:*
ஊழியர்கள் தானாக விரும்பித் தேர்ந்தெடுக்கும் ஏதேனும் ஒரு நிதி மேலாளரிடம் E - C - G ஆகிய மூன்று பிரிவுகளில் 50% + 30% + 20% என இருப்பில் உள்ள 100% தொகையினையும் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும்.
*☀2. AUTO CHOICE:*
ஊழியர்கள் முதலீடு செய்ய விரும்பாத போது அல்லது தெரியாத போது (தேர்ந்தெடுக்காத போது) நிதிமேலாளர்களே குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் E - C - G ஆகிய மூன்று திட்டங்களில் ஊழியரின் வயதின் அடிப்படையில் 100% தொகையும் முதலீடு செய்துவிடுவர்.
18 - 35 வயது வரை, E - C - G : 50%+30%+20% எனத் தொடங்கி,
55 வயது ஆகும்போது E - C - G : 10%+10%+80% என்ற விகிதத்தில் முதலீடு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஊழியரிடம் பிடிக்கப்படும் ஒட்டுமொத்தத் தொகையும் பல்வேறு புரியாத திட்டங்களின் பெயரால், 0.1% உத்திரவாதம் கூட இல்லாத பங்குச்சந்தைச் சூதாட்டத்தில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஊழியருக்கு உள்ளது.
ஊழியர் இதை மேற்கொள்ளாத சூழலில் தானாகவே ஏதேனும் ஒரு சூதாட்டத் திட்டத்தின் கீழ் தானாகவே சேர்க்கப்பட்டு விடுவர்.
*நீருக்கு நெய் எனப் பெயரிட்டுத் தீயில் வார்க்கும் யாகசாலைச் சூதுகள்* நிரம்பிய புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் சூதுகள் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து வெளிக்கொணரப்படும். . .
No comments:
Post a Comment