www.asiriyar.net

Saturday, 7 October 2017

அகவிலைப்படி உயர்வு எப்போது : காத்திருக்கும் அரசு ஊழியர்கள்

 'உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம்பள குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தை திரும்ப பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இதற்கிடையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்காக ஐந்து பேர் குழு, முதல்வர் பழனிசாமியிடம் செப்., 27ல் அறிக்கையை தாக்கல் செய்தது. 

இதில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை களையவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்படும் சத்துணவு, 
அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கவும் பரிந்துரைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

'சம்பள மாற்ற பரிந்துரைகள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும் கூட, இடைவிடாத போராட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி' என அரசு 
ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலர் அன்பரசு கூறியதாவது:

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 7வது சம்பள குழு பரிந்துரைகளை 1.1.2016 முதல் அமல்படுத்தியது. மத்திய அரசு ஊழியர்கள் சம்பள மாற்றத்தையும், அதற்கான நிலுவை தொகையையும் பெற்று விட்டனர். அவர்களுக்கு 1.7.2017 முதல் சம்பள மாற்றத்திற்கான அகவிலைப்படி உயர்வு ஒரு சதவீதத்தையும் அரசு வழங்கி விட்டது.

மத்திய அரசின் 8 வது சம்பள மாற்றத்திற்கான  சம்பள விகிதங்களை பெறாத தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு, பழைய சம்பள விகிதத்தில் 3 சதவீத அகவிலைப்படியை 1.7.2017 முதல் உயர்த்தி செப்., 26ல் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் 1.1.2016 முதல் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள மாற்றத்தையோ, நிலுவைத் தொகையையோ 21 மாதங்களாக பெறாமல் நிதி சுமைக்கு ஆளாகி உள்ளனர்.

மத்திய அரசு பழைய சம்பள விகிதத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது போல், அரசு ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் பழைய சம்பள விகிதத்தின்படி அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை, அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்று கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

No comments:

Post a Comment