வீட்டுக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துவிட்டது. காரணம், கடனை கிடனை வாங்கியாவது சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்பதுதான் வாடகைக்குக் குடியிருக்கும் பலரின் ஆசை. வங்கிகளுக்கும், கடன் நிறுவனங்களுக்கும் இந்த ஆசைதான் தீனி.
யாருக்காவது கடன் தேவைப்படுவது தெரிந்தால்போதும் ஒரு நாளைக்கு நான்கைந்து வங்கிகளிலிருந்தாவது அந்த நபருக்கு போன் போகாமல் இருக்காது. வீட்டுக்கே வந்து கடன் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். கடனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் கடனாளியாக கஷ்டப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
வீட்டுக்கடன்
எதுக்கெல்லாமோ கடன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள், சொந்தமாக வீடு வாங்க கடன் வாங்கக்கூடதா என்கிறீர்களா? தேவையிருந்தால் தாரளமாகக் கடன் வாங்கலாம். தவறே இல்லை. ஆனால், நாம் வாங்குகிற கடனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். சரி வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.
வீட்டுக்கடனைப் பொறுத்தவரை கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று வட்டிவிகிதம், இரண்டு தவணை.
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று நிலையான வட்டி (Fixed interest rate), இரண்டாவது மாறுபடும் வட்டி (Floating interest rate). நிலையான வட்டி என்பது குறிப்பிட்ட காலம் வரையிலும் வட்டி விகிதம் மாறாமலேயே இருக்கும். பின்னர் இந்த வட்டிவிகிதம் மாற்றப்படலாம். சில நிறுவனங்கள் கடன் காலம் முழுவதுமே மாறாத வட்டிவிகிதங்களை வழங்குகின்றன.
பெரும்பாலானோர் வேலையில் சேர்ந்ததும் வீடு வாங்கிவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே சிலரால் வட்டி உயர்வை சமாளிக்க முடியாமல் போகலாம். எனவே அப்படிப்பட்டவர்கள் நிலையான வட்டிவிகிதத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
மாறுபடும் வட்டி விகிதமானது, கடன் சந்தையில் வட்டி உயரும்போது வட்டி அதிகரிக்கப்படும், வட்டி குறையும்போது வட்டி குறைக்கப்படும். இந்த மாறுபடும் வட்டி விகிதத்தில் வட்டி விகித உயர்வு ஏற்படும்போது நாம் செலுத்த வேண்டிய தவணை தொகை அதிகரிக்கும். அந்த அதிகரிப்பை சமாளிக்க முடிந்தால் இந்த மாறுபடும் வட்டி விகிதத்தை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிலையான வட்டிவிகிதத்தைக் காட்டிலும், மாறும் வட்டிவிகிதமானது குறைவாகவே இருக்கிறது. நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் பின்னர் மாறுபடும் வட்டிவிகிதத்துக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.
ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு வட்டிவிகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்றால் நிலையான வட்டிவிகிதத்தைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது.
வீட்டுக்கடன் வாங்குவதாக முடிவெடுக்கும் பட்சத்தில் தனிநபர் கடன், வாகனக் கடன் மற்றும் கிரெடிட் கார்ட் போன்ற பிற கடன்களைப் பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. நீண்டகாலத்துக்கு வசிக்கும் வகையிலான இடத்தில் வீட்டைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் வீட்டுக் கடனுக்கான தொகையை நீங்களே தீர்மானித்துவிட முடியாது என்பதையும் கவனத்தில்கொள்ளவும். உங்களுடைய கடன் திரும்பச் செலுத்தும் திறனை வைத்தே கடன் தொகை தீர்மானிக்கப்படும். உங்கள் சம்பளத்துக்கு எவ்வளவு கடன் கிடைக்கும் என்று விசாரித்துவிட்டு, அதற்கேற்ப மீதமுள்ள தொகையை தயார் செய்யவேண்டும். மீதத் தொகைக்கும் கடன் வாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். ஓரளவுக்கு இருப்பை வைத்துக்கொண்டு கடனுக்கு விண்ணப்பிக்கவும்.
வீட்டுக் கடன் குறைந்தது 5 ஆண்டு முதல் 30 ஆண்டு வரையிலும் கட்டலாம். கடன் காலத்தை உங்களுடைய கடன் தொகை மற்றும் வயதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். உங்களுடைய வருமானத்தில் பாதியளவுக்கு தவணை வருமாறு இஎம்ஐ மற்றும் கடன் காலத்தை நிர்ணயித்துக்கொள்வது நல்லது. ஏனெனில் குடும்பத்தின் மாதாந்திர அடிப்படை செலவுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடக்கூடாது. குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே சம்பளதாரராக இருக்கும்பட்சத்தில் இருவரும் கடனுக்கு விண்ணப்பித்து கடன் சுமையைக் குறைக்க முடியும். அதோடு விரைவிலும் கடனைக் கட்டி முடிக்கலாம்.
வீட்டுக் கடன் வாங்கும்போது தவறாமல் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்துக்கும் விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும் வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகையும் கிடைக்கிறது.
வீட்டுக் கடனை சுலபமாகக் கட்டி முடிக்க சில வழிகளும் உள்ளன. ஊதிய உயர்வு வரும்போது அந்தத் தொகையை அப்படியே மாத தவணையில் கூட்டி விட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவணைத் தொகையை அதிகரித்து கட்டி வந்தால் விரைவில் கடனை கட்டி முடித்துவிடலாம்
Ple about mother document
ReplyDeletedetails
வீட்டுக்கடன் தேவையா??
ReplyDeleteசொத்து ஆவணம் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் வீட்டுக்கடன் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் ஆலோசனை தருகிறோம். மற்றும் வீட்டுக்கடன் அனைத்தும் பெற்றிட நாங்கள் உதவுகிறோம்.
வீட்டுக்கடன் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் எங்கள் இணையதளத்தை பாருங்கள்.. நீங்கள் விடை பெறலாம்.மற்றும் வீட்டுக்கடன் வாங்க என்ன என்ன தகுதி மற்றும் என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதையும் முழுமையாக அளித்துள்ளோம்..நன்றி… www.mohanconsultant.com
Mr.Mohan,8489445466