www.asiriyar.net

Monday 9 October 2017

சங்கங்கள் பதிவு கட்டணம் ரூ.4,500 நிலுவை வசூலிப்பில் ஆர்வமில்லை

தமிழகத்தில், சங்கங்கள் பதிவுக்கான கட்டணம், இரண்டு மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது.கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நல சங்கம், அடுக்குமாடி வீட்டு உரிமையாளர் சங்கம், நகர் நல சங்கம் என, எந்த சங்கமாக இருந்தாலும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தில், பதிவு செய்யப்பட வேண்டும்.
கட்டணம் உயர்வு


இந்த சட்ட விதிகளின்படியே, செயல்பட வேண்டும். இந்த சங்கங்களை, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன் வரை, 555 ரூபாய் இருந்தால், சங்கத்தை பதிவு செய்யலாம். பின், கட்டணம், 2,555 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது, 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதேபோல், ஆண்டறிக்கை ஆய்வு, துணை விதி திருத்தம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணங்கள், 200 ரூபாயில் இருந்து, 600 ரூபாய் வரை இருந்தது. தற்போது, 400 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரையாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டணம், அக்., 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.5 கோடி நிலுவை

இது குறித்து தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது:தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, இரண்டுலட்சத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான சங்கங்கள், பதிவுக்கு பின், கணக்கு விபரங்களை, பதிவாளருக்கு அளிக்காமல் உள்ளன. இதன்படி, சங்க பதிவை புதுப்பிக்க, 10 ஆயிரம் ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை நிலுவை உள்ளது. இவற்றை வசூலித்தால், குறைந்த பட்சம், ஐந்து கோடி ரூபாய் வரை கிடைக்கும்.இதில், பெரும்பாலான பகுதிகளில், பதிவு செய்யாமல் இயங்கும் சங்கங்களையும் கண்காணித்து, நடவடிக்கை எடுத்தால், பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதைவிடுத்து, கட்டணங்களை உயர்த்துவதால் எவ்வித பலனும் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment