நாளை முதல் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் செய்யப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.மாயவன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். செப்டம்பர் 7-ம் தேதி தாலுகா அலுவலங்களில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,
செப்டம்பர் 8-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும், மேலும் செப்டம்பர் 9-ம் தேதி சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது என ஜியோ அமைப்பின் மாநிலத் தலைவர் சுப்பிரமணி ஈரோட்டில் பேட்டியளித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 3 மாதங்களாக போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்த போராட்டத்தில் முக்கியமாக 3 கோரிக்கைகள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டுள்ளன. அதில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், தொகுப்பு ஊதியம் பெறுவோரை கால முறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என்பதுதான். இவற்றை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து அரசு தரப்பில் அக்கறை காட்டாமல் இருந்தனர். படிப்படியாக போராட்டங்களை தீவிரப்படுத்தி வந்த அந்த அமைப்பு கடந்த 22ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தது. அதில் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அரசுப் பணிகள் முடங்கின.
இந்நிலையில் ஜாக்டோ-ஜியோவின் பிரதிநிதிகளை அழைத்து பேசாவிட்டால் செப்டம்பர் 7ம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அந்த அமைப்பு அறிவித்தது. அதனால் கடந்த 4ம் தேதி ஜாக்டோ-ஜியோ பிரதிநிதிகளை அரசு அழைத்து பேசியது. அவர்கள் முன்வைந்த 3 கோரிக்கையை ஏற்பதில் உள்ள சிரமங்களை அரசு விவரமாகவும் பேசியது. பின்னர் முதல்வரிடம் பேசிவிட்டு முடிவு அறிவிக்கிறோம், 2 நாள் அவகாசம் வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி சென்னையில் கூடி மீண்டும் ஆலோசனை நடத்தியது. இறுதியில், 6ம் தேதி மாலைக்குள் சாதகமான பதிலையோ அல்லது முடிவையோ அறிவிக்காவிட்டால் திட்டமிட்டபடி செப்டம்பர் 7ம் தேதி வேலை நிறுத்தம் நடக்கும் என்றும் ஜாக்டோ-ஜியோ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இதை எதிர்பார்க்காத அரசு உடனடியாக அந்த அமைப்புடன் பேசி 6ம் தேதி ஈரோட்டில் முதல்வரை சந்தித்துப் பேச அழைப்பு விடுத்தது. இதன்படி 27 சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று பிற்பகலில் ஈரோட்டில் முதல்வரை சந்தித்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்தம் என ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
Entha entha sangam porrattam pannaporanga.pls send
ReplyDelete