தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
நீட் தேர்வு உள்பட மத்திய அரசு கொண்டு வரும் எந்தவொரு போட்டித்தேர்வையும் சந்திக்கும் வகையில் ஏற்கனவே 412 மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக மையங்கள் அமைக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள 10 சதவீத மாணவர்களுக்காக அடுத்த மாதம் முதல் வகுப்பறையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
அதைத்தொடர்ந்து விபத்து காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படும். அரசின் இலவச பொருட்களை கொண்டு செல்ல வாகன வாடகை அரசே வழங்குகிறது. அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 32 இடங்களில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்படும். அதற்கான பயிற்சியாளர் தேர்வு நடந்து வருகிறது.
அதன்பின் புத்தங்கள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 2.17 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்களுக்கு தமிழ் பாடபுத்தகங்கள் வழங்குவது குறித்து இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் ஒரு லட்சம் பிரதிகள் இலங்கைக்கு அனுப்பப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment